இந்தியாவின் மிக பெரிய பங்கு தரகு நிறுவனங்களில் ஒன்றான கார்வி ஸ்டாக் ப்ரோகிங் (Karvy Stock Broking)  விவகாரம் இப்பொழுது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ரூ 2,௦௦௦ கோடிக்கு மேல்  பண மோசடி நடந்ததன் காரணமாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்  (SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA)  கடந்த வெள்ளியன்று, கார்வி ஸ்டாக் ப்ரோகிங்க்கிற்கு (Karvy)  இடைகால தடை விதித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் பணம், பங்குகளை வர்த்தகம் செய்யவோ மற்றும் புதிய வாடிக்கையாளர்களை கொணரவோ கூடாது என செபி (SEBI) கார்வி ஸ்டாக் ப்ரோகிங்க்கிற்கு கட்டளை இட்டுள்ளது.

இதைத் தவிர, கார்வி பிறரிடமிருந்து  அங்கீகாரம் பெற்ற  உத்தரவுகளை (Power of Attorney)  பங்கு களஞ்சியங்கள்  (Depositories : NSDL மற்றும் CDSL ),  செயல் படுத்தக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் பங்கு களஞ்சியங்கள், கார்வி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு மற்றும் வெளியில் செல்லும் பங்குகளையும்  கண்காணிக்க அறிவுறுத்தப்‌ பட்டுள்ளது.

முறைகேடுகள்

தன் முதல்கட்ட விசாரணைக்குப் பின், தேசிய பங்கு சந்தை (NATIONAL STOCK EXCHANGE) கார்வியின் பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. முதல்கட்ட அறிக்கையில், கார்வி ஸ்டாக் ப்ரோகிங் அதன் வாடிக்கையாளர்களுக்கு  உரிமையான ரூ 1,096  கோடிகளை தன் குழுமத்தின் மற்றோரு நிறுவனமான கார்வி ரீயால்ட்டிக்கு  (KARVY REALTY) மாற்றியுள்ளது என  NSE கூறியுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் ஏப்ரல் 2016 -க்கும்  - அக்டோபர் 2019-க்கும்  இடையில் நடந்தவையாகும் என்று NSE  சுட்டி காட்டியுள்ளது.

மேலும் இந்த ஆண்டில், கார்வி ஸ்டாக் ப்ரோகிங் தன்னிடம் அடமானம் வைத்த ஐந்து வாடிக்கையாளர்களின் பங்குகளை வெளி சந்தையில் (OFF MARKET) ரூ 228.07 கோடிகளுக்கு விற்று விட்டது. இதைத் தவிர, தன்னிடம் ஒரு வர்த்தகம் கூட செய்யாத 156  முதலீட்டார்களின் பங்குகளையும் ரூ 27.8 க்கு விற்று விட்டது. வாடிக்கையாளர்களின் பங்குகளை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் NSE குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஜூன் 2019 முதல்  பரிவர்த்தனை செய்யாத 291 வாடிக்கையாளர்களின் ரூ 116 கோடிகள் மதிப்புள்ள பங்குகளையும் தன் சொந்த கணக்கிற்க்கு மாற்றி விட்டது, என NSE தன் விசாரணையில் கண்டு பிடித்துள்ளது.  இதனை தவிர மேலும் பல முறைகேடுகளில் கார்வி ஸ்டாக் ப்ரோகிங் ஈடுப்பதாக, NSE தன் அறிக்கையில் கூறியுள்ளது.

தேசிய பங்கு சந்தையின் தடயவியல் தணிக்கை (Forensic Audit) அறிக்கைக்கு பிறகு செபி (SEBI) தனது இறுதி உத்திரவை பிறப்பிக்கும்.

கார்வியின் சமாதானம்

ஆனால், கார்வி ஸ்டாக் ப்ரோகிங் நிறுவனம் தான் ஸ்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது‌.  கார்வி குழுமத்தின் தலைவர் (Chairman) C பார்த்தசாரதி , 200 க்கும் குறைவான வாடிக்கையாளர்களின்  வெறும் ரூ 25  கோடிகள் மற்றுமே நிலுவையில் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும்‌,  இது ஒரு தற்காலிக நிபந்தனையே, என கார்வி கூறியுள்ளது. தனக்கு எதிராக கூறப்பட்டள்ள ஒவ்வொறு குற்றச்சாட்டுக்களுக்கும் செபி (SEBI) மற்றும் பங்குச் சந்தைகளுக்கு (STOCK EXCHANGES) டிசம்பர் 21  கெடுவுக்குள் விலாவாரிகய பதில் கூற  தயாராக  உள்ளது எனவும் அது அறிவித்துள்ளது.

சூறாவளியில் சிக்கப் போவது யார்?

கார்வியில் நேரடி வர்த்தகம் செய்பவரைத் தவிர, வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள் (MUTUAL FUNDS ) இவைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம் உள்ளது. வங்கிகள் மற்றும் மியூச்சுவல்  ஃபண்டுகள் கார்வியின் கடன் பத்திரங்களை வாங்கியுள்ளது. அவைகளின் தற்போதைய மதிப்பு முழுமையாக தெரியவில்லை. ஆனால் பங்கு சந்தை நிபுணர்கள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என கணித்து உள்ளனர். அதனால் இந்த வங்கிகள் மற்றும் மியூச்சுவல்  ஃபண்டுகளில் முதலீட்டு செய்துள்ள வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது, என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இடியாப்பச் சிக்கல்

கார்வி என்னதான் சமாதானம் கூறினாலும், வாடிக்கையாளர்கள் இன்னும் குமுறிக் கொண்டுத்  தான் இருக்கிறார்கள். நஷ்டமடைந்த பல வாடிக்கையாளர்கள் மற்றும் கார்வி ஸ்டாக் பிரொகிங்கில் மின்கணக்கு (demat) வைத்திருபவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.  செபியின் கட்டளைகள் மற்றும் கார்வியின் முறைகேடுகளால்,  கார்வியில் முடங்கியுள்ள பங்குகளை  எப்படி மீட்டெடுப்பது என்று விழி பிதுங்கி நிற்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு என்ன வழி

கார்வி வாடிக்கையாளர்களுக்கு சுலபமான வழி கிடையாது என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பங்குகள் சரியாக இருப்பின், பங்கு களஞ்சியங்களான CDSL  மற்றும் NSDL-லை நேரடியாக அணுக வேண்டும். அவர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி  குறுஞ்செய்தி மூலம் பங்கு களஞ்சியங்களை தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களுடைய தற்போதைய மின்கணக்கில் (demat) உள்ள இருப்புநிலைமையை அறிந்துகொள்ள வேண்டும்.

அது சரியாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மற்றொரு சரியான பங்கு தரகரிடம் புதிய மின்கணக்கை தொடங்க வேண்டும். அதன்பின் டெலிவரி இன்ஸ்டிரக்ஷன் ஸ்லீப் மூலம் (delivery instruction slip) தன் கார்வி மின்கணக்கில் உள்ள பங்குகளை புதிய மின்கணக்கிற்கு மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை: பெயர், கம்பெனியின் பெயர் கம்பெனி பங்குகளுக்கு உண்டான பிரத்தியேக நம்பர் (ISIN) மற்றும் கையொப்பம் ஆகியவை சரியாக உள்ளனவா என்று சரி பார்த்து பிறகு டெலிவரி இன்ஸ்டிரக்ஷன் ஸ்லிப்பை கொடுக்கவேண்டும். அதன்பின், அனைத்தும் சரியாக இருந்தால், பத்து அல்லது பதினைந்து நாட்களில் கார்வியில் உள்ள பங்குகள் புது மின்கணக்கிற்கு மாற்றி விடப்படும்.

வாடிக்கையாளர்கள் சமீபகாலத்தில் வர்த்தகம் செய்து பணம் செலுத்திய பிறகு, பங்குகள் தன் மின்கணக்குக்கு வரவில்லை என்றால், மும்பாய் பங்குசந்தை அல்லது தேசிய பங்கு சந்தையிடம் எழுத்து மூலம் முறையிட வேண்டும். பங்குச் சந்தைகள் தாங்கள் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பங்குகளை உங்களுடைய புது மின்கணக்கிற்கு மாற்றி விடுவார்கள். ஆனால் இந்த  செயல்முறை பாதை மிகவும் நீண்ட நாட்கள் எடுக்கும்.

மற்றொரு கடினமான பாதை வாடிக்கையாளர்கள் தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையில் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் (INVESTORS SERVICE CENTRE) புகார் அளிக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்குள் தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உங்கள் புகார் சரி செய்யப்படவில்லை என்றால், பங்குசந்தைகள் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் மையத்திற்கு (investors' Grievances Redressal Committee) தங்களுடைய புகார்களை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் அங்கு எழுத்து  மூலமாக நடுவரிடம் தங்கள் குறைகளை முறைப்படி கூறவேண்டும். நடுவர் அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்.

ஆனால் பங்குசந்தைகள், கார்வி முறைதவறிய (default) நிறுவனம் என்று அறிவித்து அதன் கணக்குகளை முடக்கி வைத்தாலோ அல்லது அதன் உரிமத்தை ரத்து செய்தாலோ வாடிக்கையாளர்களுக்கு நடுவர் மன்றம் சென்று முறையிடமுடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், பங்குசந்தைகள், முறைதவறிய பங்கு தரகரின் கணக்குகளை சரிபார்த்து பின்  பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும். உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவனமாக பத்திரிகைகளை வரும் விளம்பரங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு உரிமையான பங்குகளை விண்ணப்பித்து உரிமை கோரவேண்டும்.  பங்குசந்தைகள் அதற்கு நிகரான பணத்தை பங்கு தரகர் கணக்கிலிருந்து உங்களுக்கு கொடுக்கும். பங்கு தரகர் கணக்கில் முழூ பணம் இல்லை என்றால், முதலீட்டாளர்கள்  பாதுகாப்பு நிதியிலிருந்து  (Investors Protection Fund) அவரவர் தகவுக்கேற்ற மாதிரி (pro rata basis) பகிர்ந்து அளிக்கப்படும்.

மேலே சொன்ன அத்தனை முறைகளும் காலதாமதம் மற்றும் மன உளைச்சல் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

comment COMMENT NOW