இந்த ஆண்டு பல்வேறு பல்கலைக்கழகங்களில், பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்கள் 85 லட்சம் பேர்

தேர்ச்சி பெற்று வெளிவர இருக்கும் இந்நிலையில், நிறுவனங்கள் வேலைக்கு புதியவர்களை எடுப்பதை நிறுத்தியுள்ளதால், குறிப்பாகப் புதிதாக தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர்களின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும்.

இந்த கல்வியாண்டில், புதியவர்களை வேலைக்கு எடுப்பது, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, பின்பு இடங்களை ஒதுக்குவது போன்றவற்றிற்கு 6-8 மாத கால அவகாசமெடுக்கும். அதே சமயம் அடுத்த ஆண்டு இதேபோன்ற எண்ணிக்கையில் பதிய பட்டதாரிகள் வர இருப்பதால், இது இந்தாண்டு வேலை தேடுவோரின் கவலையை மேலும் அதிகரிக்கும்.

"கடந்த வருடத்தில், கல்லூரி வளாகத்திலிருந்து, குறிப்பாக எம்.பி.ஏ கல்லூரிகளிலிருந்து, வேலைக்கு எடுப்பது அதிகரித்தது. காரணம் நிறுவனங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்த்தன. ஆனால், தற்பொழுது பட்டம் முடிக்கும் புதியவர்களின் வாழ்க்கைப் பயணம் சற்று கடினமான பாதையாகயிருக்கும். மறுபடியும் பணிக்கு ஆள் எடுப்பது தொடங்கும் வரை, அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்தோ அல்லது சிறு கம்பெனிகளில் வேலைப்பயிற்சியோ (அப்புறன்டீஸ்) சேர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்,” என்று மனிதவள நிறுவனமான டீம்லீஸ் சர்வீசஸின் (TeamLease) இணை நிறுவனர் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

"இப்போது கோவிட் -19 காரணமாக, அவர்களின் பட்டப்படிப்பு எந்த மாதிரி பின்புலத்தைக் கொண்டது என்பதை முக்கியமாகக் கருதமாட்டார்கள். முதலாளிகளே பிழைப்புக்காகப் போராடுகிறார்கள், எப்படியாவது அவர்கள் அடுத்த 3-6 மாதங்களுக்குத் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, ஏற்கனவே பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது புதியதாக பணிக்கு எடுப்பதாக இருந்தாலும், அனைத்துமே இப்போதைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

2018 கல்வியாண்டில், சுமார் 64.7 லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தனர், மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் 15 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது வழக்கமான மூன்று ஆண்டு பட்டப்படிப்புகள் தவிர சிறப்புப் பட்டங்களான சட்டம், பொறியியல், மருத்துவம், வணிக மற்றும் மேலாண்மை படிப்புகள் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும், 10-14 லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெறுகிறார்கள். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாகப் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டும் இதே அளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருவார்கள்.

கேரியர் பாயிண்டின் (Career Point) நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரமோத் மகேஸ்வரி கூற்றுப்படி: “பட்டம் பெறும் மாணவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் உயர்படிப்புக்குச் செல்வதை விட வேலையைத் தேர்வு செய்கிறார்கள், இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை காரணமாக புதிய ஆட்சேர்ப்பு நடக்கவில்லை, அடுத்த 6 மாதங்கள் வரை இந்த நிலை நீடிக்கும். மந்தநிலை ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தால், இதே எண்ணிக்கையில் புதியவர்களும் வேலை தேடும் வேட்டையில் சேருவார்கள். மேலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆட்சேர்க்கும் பணி முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை " என்று அவர் கூறினார்.

கீழ்நிலை பணியாளர்களுக்கு ஆபத்து

கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறும் பலர் நுழைவு நிலை வேலைகளைத் தேர்வு செய்கிறார்கள். சுமார் 15-20 சதவீதம் பேர் நேரிடையாக இடத்திற்கே செல்லும் பணியையும், மற்றவர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளும் பதவிகளில் சேர்கின்றனர் என்று பணியாளர் நிறுவனமான எக்ஸ்பெனோவின் (Xpheno) இணை நிறுவனர் கமல் கரந்த் கூறினார். இந்த முறை, இவர்கள் தான் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். "கோவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து, பல நிறுவனங்கள் எந்த வளர்ச்சியும் இல்லாத காரணத்தால் களத்திலிள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன," என்று கரந்த் மேலும் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் வளர்ச்சியைத்தான் காணமுடியும் என்பதால் , நிறுவனங்கள் தற்பொழுது இருக்கும் நிலையில் நீடிக்கவும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு (pink slips) கொடுப்பதைத் தவிர்க்க முயல்கின்றன.

பொருளாதாரம் மற்றும் புதிய பட்டதாரிகள் மீண்டு வருவதற்கு ஒரு நெடிய பயணமாக இருக்கும்.

Translated by P Ravindran

comment COMMENT NOW