கொரோனாவைரஸ் தொற்றுநோயால் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் துபாய், தோஹா மற்றும் குவைத் வளைகுடா போக்குவரத்து விமான நிலையங்களில் திரண்டு வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய (South-East Asia-SEA) போக்குவரத்து மையங்களான சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து மற்றும் கிழக்கு ஆசியாவின் ஹாங்காங் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

 

இதையொட்டி, வளைகுடா விமான நிலையங்கள் வழியாக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்கு செல்லும் விமான பயணக் கட்டணங்கள் 15-20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

 

வைஜயந்தி கிருஷ்ணன் ஜூன் மாதம் தனதுகுழந்தைகளைப் பார்க்க சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழியாக நியூயார்க்கிற்கு செல்லவிருந்தார், ஆனால், டிக்கெட்டை ரத்து செய்து அதற்கு பதிலாக துபாய் வழியாக முன்பதிவு செய்தார். ஆயிரக்கணக்கானோரின் நிலை இதுதான். இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளவர்கள் கூட தங்கள் பயணங்களை ஒத்திவைத்துள்ளனர் என்று பயண முகவர்கள் தெரிவித்தனர்.

 

தென்கிழக்கு ஆசியாவில் (SEA) சிங்கப்பூர், மலேசியா மற்றும் பாங்காக் போன்ற போக்குவரத்து மையங்கள் வழியாக அமெரிக்காவிற்கு செல்வோர் இல்லை. எல்லோரும் வளைகுடா விமான நிலையங்கள் மூலமாக மட்டுமே தேர்வு செய்கிறார்கள் என்று தூதரக பயண மற்றும் சுற்றுப்பயணங்களின் இணை நிர்வாக இயக்குனர் சண்முகபிரியா தியாகராஜன் தெரிவித்தார். "ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் SEA போக்குவரத்து விமான நிலையங்கள் வழியாக பயணம் செய்வதற்காக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்கு ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன," என்று அவர் பிசினஸ்லைனிடம் கூறினார்.

 

“சாங்கி விமான நிலையம் காலியாக இருந்தது,” என்று பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறினார். அவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்தார்.

 

பயணத்தில் சரிவு

 

சென்னையில் இருந்து மிகவும் வசதியான போக்குவரத்து பயண இடமான சிங்கப்பூர் வழியாக சிட்னிக்கு விமானம் முன்பதிவு செய்த ஒரு வாடிக்கையாளர், டிக்கெட்டை ரத்து செய்து, சுற்றுப் பாதையாக இருந்தாலும்  துபாய் வழியாக அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

 

வைரஸ் பரிசோதனை மற்றும் திரையிடுதல் காரணமாக சர்வதேச விமானநிலையங்களில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதங்களால் மக்கள் பயணத்தைத் தவிர்க்கிறார்கள். "சர்வதேச போக்குவரத்தில் 30-40 சதவீதம் சரிவு ஏற்படக்கூடும்," என்று அவர் மேலும் கூறினார்.

 

வளைகுடா மற்றும் SEA பரிமாற்றங்களுக்கிடையேயான விமான கட்டணத்தில் ஒரு ஒப்பீட்டைக் கொடுத்த தியாகராஜன், ஜூன் மாதத்தில் சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை 93,000 ரூபாய் (துபாய் வழியாக), ஹாங்காங் வழியாக கேத்தே பசிபிக் பகுதியில் 65,000 ரூபாய் ஆக இருந்தது என கூறினார். இதேபோல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சிங்கப்பூர் வழியாக சிட்னிக்கு விமான கட்டணம் 70,000 ரூபாய்க்கும், துபாய் வழியாக எமிரேட்ஸ் 97,000 ரூபாயாக இருந்தது.

பயனீர் ஏரோடிராவல்ஸ் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பி. முருகேசன் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் சுமார் 1.5 லட்சம் பேர் சென்னையிலிருந்து உலகின் பல இடங்களுக்குச் செல்கின்றனர். இதில், கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் SEA விமான நிலையங்கள் வழியாக தான் செல்கின்றனர். இருப்பினும், இந்த போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு வளைகுடா விமான நிலையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளது. இதில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு செல்லும் தொழிலாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

 

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போன்ற ஆபிரிக்க விமான நிறுவனங்கள் கூட அடிஸ் அபாபாவழியாக அமெரிக்க இடங்களை இணைக்கின்றன. தற்போதைய போக்கைப் பார்க்கும்போது, ​​சில வளைகுடா கேரியர்கள் கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு கூட சாத்தியம் உள்ளது, என்றார்.

 

பயணக் கட்டுப்பாடுகள்

 

கொரோனாவைரஸ் பீதியைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் ஏற்கனவே பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில தேசிய விமானங்களும் சீனாவுக்கு விமான இடைநீக்கங்களை அறிவித்துள்ளன.

 

சீன பயணிகள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான இந்தியா விசா வசதியை இந்தியா நிறுத்தியது. ஏர் இந்தியா தனதுமும்பை-டெல்லி-ஷாங்காய் விமானங்களை நிறுத்தி டெல்லி-ஹாங்காங் விமானங்களை குறைத்துள்ளது, இண்டிகோ தனது டெல்லி-செங்டு மற்றும் பெங்களூரு-ஹாங்காங் விமானங்களை நிறுத்தியது.

 

இதேபோல், கடந்த 25 நாட்களில் சீனாவை விட்டு வெளியேறிய அல்லது கடந்து வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு ஆஸ்திரேலியா நுழைவை மறுத்தது, ஜெட்ஸ்டார் ஹெஃபி, குயாங் மற்றும் சுஜோவுக்கான விமானங்களை நிறுத்தி வைத்ததுடன், கான்டாஸ் மெயின்லேண்ட் சீனாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது.

 

அமெரிக்கா, ஜப்பான் உட்பட 25 க்கும் மேற்பட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் பல விமான நிறுவனங்கள் சீனாவுக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

 

Translated by Gayathri G

comment COMMENT NOW