நாவல் கொரோனா வைரஸ் (கோவிட்-19) உடன் தொடர்புடைய வதந்திகள் மற்றும் அச்சங்கள் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் சரிவை சந்தித்துள்ளன. ஒவ்வொரு இரண்டு கிலோ சிக்கன் தரும் பறவையிலும் விவசாயிகள் ரூ 100-130 வரை இழப்பை சந்திக்கிறார்கள்.

நேரடி விவசாய விலைகள் பல்வேறு பிராந்தியங்களில் ஒரு கிலோ ரூ 15-35 என உள்ளது. ஆனால், உற்பத்தி விலையோ ரூ 80-85 வரை நிலவுகிறது. இதன் விளைவாக, கோழி பண்ணையாளர்கள் இழப்பைக் குறைக்க தங்கள் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக துறை இழப்புகள் வாரத்திற்கு ரூ 1,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தொழில்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸால் கோழி பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் மற்றும் போலி செய்திகள் சமூக ஊடக தளங்களான வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் போன்றவற்றில் சுற்றத் தொடங்கியதன் பின்னர் இந்தத் துறைக்கு சுமார் ரூ 7,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் மட்டும் ரூ 600 கோடியை இழந்துள்ளனர்; ஏனெனில் ரூ 4 உற்பத்தி செலவுக்கு எதிராக பண்ணை விலை ஒரு துண்டு ரூ 2.50 ஆக சரிந்தது. அது போலவே, 2019 ஆம் ஆண்டில் சுமார் ரூ 4,500 கோடியை இழந்த பின்னர் முட்டை உற்பத்தியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர்.

மைய அரசின் உதவியை நாடுகிறது

"தொழில்துறைக்கு இந்த வகையான இழப்புகளைத் தக்கவைப்பது கடினம். தொழிற்துறையை மீட்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். உழைக்கும் மூலதனக் கடன்களை கால கடன்களாக மாற்ற வங்கிகளை வழிநடத்தவும், தற்போதுள்ள கால கடன்களை இரண்டு வருட திருப்பிச் செலுத்துவதற்கான தடையை அறிவிக்கவும் நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம்,” என்று சீனிவாசா பண்ணைகளின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் சித்தூரி கூறினார். இவர் சர்வதேச முட்டை ஆணையத்தின் தலைவரும் கூட.

கடந்த வாரம் கேரளாவில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதால் பண்ணையாளர்களின் துயரங்கள் அதிகரித்துள்ளன.

"நாங்கள் நெருப்பு வளையத்தில் உள்ளோம்," என சுகுனா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பி சவுந்தரராஜன், நிலவும் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்தார். மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

"கோழி பொருட்களின் நுகர்வு தொடர்பான அச்சங்களைத் தீர்க்க மாநில அரசுகளும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

கோழித் துறையின் வருடாந்திர வருவாய் 1.2 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மேலும் இந்தத் தொழில் 2.75 கோடி மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

சமூக ஊடக வதந்திகள்

கோழி இறைச்சி மூலம் கோவிட் -19 பரவக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வதந்திகள் கோழி சாப்பிடுபவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நுகர்வு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது,” என்று சித்தூரி கூறினார்.

இந்தியா வாரத்திற்கு சுமார் 9 கோடி (பிராய்லர்) பறவைகளையும் 2.25 கோடி முட்டைகளையும் பயன்படுத்துகிறது.

அகில இந்திய கோழி வளர்ப்போர் சங்கம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது. கோழி பண்ணைகளுக்கு புதிய கடன்களை விடுவித்து தற்போதைய நெருக்கடியிலிருந்து அவர்களுக்கு பிணை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

"சோயா விதை மற்றும் சோயா உணவுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு நாங்கள் உங்களைக் கோருகிறோம்," என்று அச்சங்கத்தின் தலைவர் பகதூர் அலி இந்த குறிப்பில் தெரிவித்தார்.

மக்காச்சோளம், சோயா விவசாயிகள் பாதிப்பு

கோழித் தொழில் சோயா மற்றும் மக்காச்சோளத்தின் முக்கிய நுகர்வோராக இருப்பதால், இந்த இரண்டு பயிர்களையும் வளர்க்கும் விவசாயிகளையும் இந்த நெருக்கடி பாதிக்கிறது. கடந்த சில நாட்களில், மக்காச்சோளத்தின் விலை ஒரு கிலோவுக்கு ரூ 25 ல் இருந்து ரூ 15 ஆக குறைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பறவைக் காய்ச்சல் நெருக்கடியை நினைவு கூர்ந்த கோழிப் பண்ணையாளர்கள் வட்டி குறைப்பு மற்றும் மக்காச்சோளத்தை அரசாங்க பங்குகளில் இருந்து கிலோ ரூ 4 விற்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translated by Gayathri G

 

comment COMMENT NOW