"மோஷி மோஷி, கொன்னிச்சிவா தோஸ்ஷிதான் தேசு கா," மாலினி கன்யாவைப் பார்த்து விசாரிக்கிறாள். உடனே பதில் வருகிறது : “ஹாய், கொனிச்சிவா வட்டாஷி 101 நோ கன்யா தேசு. ஹேயா நோ ஏர்-கான் கா சுகனைன் தேசு கா. "

இவ்விரு பெண்களும் தங்கள் உரையாடலின் விஷயத்தை சித்தரிக்கும் ஒரு பெரிய திரைக்கு முன் ஜப்பானிய மொழியில் பேசுகிறார்கள்: கன்யாவின் அறையில் உள்ள ஏர் கண்டிஷனர் வேலை செய்யவில்லை. ஜப்பானிய மொழியில் இந்த சூழ்நிலை அரட்டை அவர்களின் வகுப்பின் ஒரு பகுதியாகும், இது தடாவோ தனகா என்பவரால் கற்பிக்கப்படுகிறது. ஆசிரியர் இவர்களது உரையாடலை கூர்ந்து பார்க்கிறார், அவை முடிந்ததும் அவற்றைச் சரிசெய்கிறார். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை - கேட்கும் அனைத்து மாணவர்களும் ஜப்பானிய மொழியில் சிறிது தேர்ச்சி பெற்றவர்கள்.

இந்த ஜப்பானிய வகுப்பு இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றில் உள்ள வெளிநாட்டு மொழி மையங்களில் நடப்பதாக நீங்கள் நினைத்தால், தவறு . உண்மையில், இது தமிழ்நாட்டின் எஃகு மற்றும் ஜவுளி நகரம் என அறியப்படும் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறுகிறது.

இதைப் பற்றி எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்று இந்த நகரத்தில் உள்ள ஒரு பெரிய கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியான சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத் தலைவர் சொக்கோ வள்ளியப்பா கூறுகிறார். பொதுவாக பெரிய இந்திய பெருநகரங்களில் கற்பிக்கப்படும் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி படிப்புகளைப் போலன்றி, ஜப்பான் ஜப்பானிய மொழித் தேர்ச்சித் தேர்வை (JLPT) பிராந்தியமையங்களுக்கு எடுத்துச் சென்று, மாணவர்கள் சான்றிதழ் தேர்வுகளை எழுதுவதை எளிதாக்குகிறது. ஜே.எல்.பி.டி.யை நடத்துவதற்கு ஜப்பான் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் எட்டாவது மையம் சேலம் ஆகும்.(மற்றவை டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ளன).

கதவை தட்டும் வாய்ப்பு

இந்த கல்லூரியில் டிசம்பர் 1 ஆம் தேதி, சோனா கல்லூரியில் சுமார் 800 மாணவர்கள் (கேரளாவைச் சேர்ந்த பலர் உட்பட) ஜே.எல்.பி.டி. தேர்வு எழுதினர்.ஜப்பானின் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவதால்,  2025 க்குள் ஐந்து லட்சம் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்க அந்த நாடு தயாராக உள்ள நிலையை இது படம் பிடித்து காட்டுகிறது.

"ஜப்பானில் நானோ தொழில்நுட்பத்தில் முதுகலை-முனைவர் பணிகளைச் செய்த எங்கள் பேராசிரியர் மூலம் இந்த வாய்ப்பை பற்றி அறிந்து கொண்டோம்; ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது எங்கள் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றார். ஜப்பானிய மொழியும் தமிழும் இலக்கண ரீதியாக ஒத்துப்போவதால் , எங்கள் மாணவர்களுக்கு அதை கற்பது எளிதாக உள்ளது , ”என்கிறார் வள்ளியப்பா.

திறமை அவசியம்

சோனா தனது உலகளாவிய தொழில் தொடர்புகள் மூலம் மாணவர்களுக்கு வெவ்வேறு வேலை வாய்ப்புகளைக் கண்டறிய விரும்பியது. வள்ளியப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய குழுவை ஜப்பானுக்கு அழைத்துச் சென்று, இந்திய மாணவர்களுக்கு தேர்வாளர்களுடன் வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இந்திய மாணவர்களின் தொழில்நுட்ப அறிவில் திருப்தி அடைந்த அவர்கள், ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் என்று கூறினர். ஜப்பானிய நிறுவனங்கள் தாங்கள் பணியமர்த்தும் ஆட்கள் அந்நாட்டு மொழியில் N 3 அளவீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர். N5 மிகக் குறைந்த தரமாக இருக்கும்.

நானோடெக் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ். சரவணன், ஜப்பானில் 12 ஆண்டுகளாக படித்து பணியாற்றியவர் மற்றும் ஜப்பானிய மொழியினை திறம்பட கையாள்பவர். அவர் கூறுகையில், சோனாவின் குறிக்கோள் தெளிவாக இருந்தது: மாணவர்களுக்கு ஜப்பானிய ஆசிரியர்களை நியமிக்கவும், இதனால் மொழி தவிர, மென் திறன்கள், ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு கையாள்வது, உச்சரிப்பு எல்லாவற்றையும் அவர்கள் அறிய வேண்டும் என விரும்பினர் . “மொழி இடைவெளி காரணமாக வெளிநாட்டினருக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கிறது. இப்போது, ஜப்பானில் தரையிறங்குவதற்கு முன், எங்கள் மாணவர்கள் புவியியல், மொழி, பழக்கவழக்கங்களை நன்கு அறிந்திருக்கலாம்; இது மிகவும் முக்கியமானது, ”என்று அவர் கூறுகிறார்.

ஹிரோமி ஷிபயாமா மற்றும் தனகா என்ற இரண்டு ஆசிரியர்கள் 1-3 ஆண்டுகளாக சேலத்தில் இருந்து, சோனா மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். இப்போது, முதல் ஆண்டிலிருந்து 700 மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்க பதிவுசெய்துள்ளனர்.

சொல்லும் செயலும்

2019 இல் பட்டம் பெற்ற சோனாவைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் ஏற்கனவே  அங்குள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைக்கப் பெற்று ஜப்பானில் உள்ளனர் . ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்ற புதிதாக வேலையில்  அமரும் தகுதிவாய்ந்த பொறியியலாளர் ஒரு ஆண்டுக்கு பெறும் சம்பளம் 18-20 லட்சம்! வீட்டு வாடகைக்கு ஒரு பகுதியையும் நிறுவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் தங்கள் வருமானத்தில் குறைந்தது 40-50 சதவீதத்தைமிச்சப்படுத்த முடியும். இது இங்குள்ள ஒரு வேலையில் சம்பாதிக்கவும் சேமிக்கவும் பலர் எதிர்பார்க்கும் அளவை விட அதிகமாக இருக்கலாம்.

2018 ஆம் ஆண்டில் சோனா கல்லூரியிலிருந்து எலக்ட்ரானிக்ஸ்மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற டி.எம்.சன்மதி, மேற்கு ஷிஜுயோகா ப்ரிஃபெக்சரில் உள்ள ஹமாமட்சு என்ற நகரத்தில் கடந்த ஜனவரி முதல் ஒரு உயர் நிறுவனத்தில் நெட்வொர்க் பாதுகாப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஜப்பானில் பணிபுரிவது பாதுகாப்பானது என்றும், மக்களுக்கு உதவியாக இருப்பதாகவும் அவர் கூறும்போது, ஜப்பானிய ஆசிரியரிடமிருந்து மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார் .

ஒசாக்காவில் 2019 ஜூலை முதல் மாடுலர் ஆலோசகராக பணியாற்றி வரும் சிவசங்கர் யுவராஜ், இந்தியாவில் தற்போது நிலவி வரும் மந்தநிலையில் ஒரு நல்ல வேலை கிடைப்பது சவாலாக உள்ளது என்று கூறுகிறார்; ஆனால் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், அந்நாட்டில் ஒரு நல்ல வேலையில் சேர முடிந்தது; இது அவரது சம்பளத்தில் குறைந்தது 50 சதவீதத்தை மிச்சப்படுத்த அனுமதித்தது. சோனாவிலிருந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற ஆர்.அரவிந்தன், தான் ஒரு சராசரி மாணவர் என்று கூறுகிறார். அவர் தனது ஜப்பானிய ஆசிரியரின் ஆலோசனையின் பேரில் அங்கு உள்ள ஒரு ஜப்பானிய மொழிப் பள்ளியில் சேர முடிவு செய்தார், மேலும் அவர் மொழியில் N2 நிலை தேர்ச்சி பெறும் வரை பகுதிநேர பணியாளராக பர்கர் கடையில் பணியாற்றினார். இப்போது, அவர் வாகாயாமாவில் மெருகூட்டல் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் வடிவமைப்பு துறையில் பணிபுரிகிறார். "ஜப்பானியமொழியைப் படித்து இங்கு செல்வதன் மூலம் என் வாழ்க்கை மாறிவிட்டது" என்றுஅவர் தொலைபேசியில் கூறுகிறார்.

ஐ.டி வேலைகளுக்கான சலுகைக் கடிதங்களைப் பெற்றுள்ள 20 மாணவர்களை கொண்ட அடுத்த அணி  இப்போது அங்கு செல்ல தயாராக உள்ளது. தேர்வாளர்கள் நம் மாணவர்களின் திறணை கண்டு வியக்கும் போதும், ஜப்பானிய செயல்முறை மெதுவாக உள்ளது என்கிறார் வள்ளியப்பா. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, ஜப்பானுக்கு அதிகமான இந்தியர்களை தயார்படுத்துவதற்காக சேலம் தனது முயற்சியைச் செய்து வருகிறது.

 

எனவே, அடுத்த முறை நீங்கள் தமிழ்நாட்டின் இந்த சிறிய நகரத்தில் இருக்கும்போது, ஒரு பெண்மணிக்கு உதவி செய்தால் , “அரிகடோ கோசைமாசு!” (நன்றி) என அவர் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட வேண்டாம்.

Translated by Gayathri G

comment COMMENT NOW