வளைகுடாவில் மணம் பரப்ப தயாராகும் இந்திய ஏலக்காய்கள்

V.Sajeev Kumar Updated - December 06, 2021 at 03:08 PM.

இப்போது முடிவடைந்த வளைகுடா உணவு எக்ஸ்போவில் இந்திய ஏலக்காய்க்கான தேவை சுமாராகவே இருந்தது. ஆனாலும் அது ஏற்றுமதியாளர்களை எவ்விதத்திலும் வளர்ந்து வரும் வளைகுடா சந்தைகளில் நுழைய முயற்சிப்பதில் இருந்து தடுக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ரமலான் பண்டிகை காலங்களில் ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இருப்பினும், குவாத்தமாலா வகைகளை விட இந்திய ஏலக்காயின் அதிக விலை ஏற்றுமதியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஏற்றுமதி தர இந்திய ஏலக்காயின் விலை ஒரு கிலோவிற்கு $58-60 முதல் $50-52 வரை குறையத் தொடங்கியிருந்தாலும், குவாத்தமாலன் பயிர் $38-42 வரம்பில் கிடைக்கிறது என்று போடிநாயக்கனூரை தளமாகக் கொண்ட ஏலக்காய் ஏற்றுமதி நிறுவனமான மெர்காரிக்ஸ் வேர்ல்டுவைட் தனவந்தன் முருகேசன் தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களில் ஏற்றுமதி விலை நிலையானதாக இருப்பதாகவும், இறக்குமதியாளர்கள் உள்நாட்டு விலையில் மேலும் சரிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். செப்டம்பர் 2020 அறுவடையில் உலக சந்தையில் குவாத்தமாலன் ஏலக்காயின் பற்றாக்குறையை இந்திய பொருட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வளைகுடா சந்தைகளில் இந்திய ஏலக்காய் மிகவும் விரும்பப்படும் வகையாகும். வெளிநாட்டு சந்தைகளான துபாய், குவைத், ஈரான், ஈராக், ஜோர்டான், பஹ்ரைன், துருக்கி, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கூட நமது ஊர் ஏலக்காய்க்கு நல்ல மவுசு உள்ளது . இருப்பினும், குறைந்த உள்நாட்டு உற்பத்தி காரணமாக அதிக விலைகள் குவாத்தமாலா பயிருக்கு நன்மையை அளித்துள்ளன.

பல வளைகுடா இறக்குமதியாளர்கள் இந்திய ஏலக்காயை அதன் தரம் காரணமாக விரும்புகிறார்கள் என்று முருகேசன் கூறினார். ஆனால் பூச்சிக்கொல்லி எச்சங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சவூதி அரேபியா நாட்டுக்கு ஏற்றுமதியை பாதித்துள்ளன.

வறட்சி காரணமாக இந்த பருவத்தில் குவாத்தமாலா பயிர் பற்றாக்குறை சுமார் 40 சதவீதம் என்று கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் முன்னணி தோட்டக்காரர் எஸ்.பி.பிரபாகர் தெரிவித்தார். மேலும், அங்கு விலைகள் இருமடங்காகிவிட்டன, இது குறுகிய காலத்தில் நேர்மறையானதாக இருக்கும்.

வர்த்தகர்களின் கூற்றுப்படி, மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே இப்போது ஏற்றுமதி செய்யப்படுகிறது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு 15-20 சதவீதமாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், ஏலக்காய் ஏற்றுமதி கடந்த ஆண்டு ₹ 1,000 கோடியிலிருந்து இந்த ஆண்டு ₹ 500 கோடியாக குறைந்துள்ளது.

இருப்பினும், பல தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களை கட்டுப்படுத்துவது வரும் பருவத்தில் ஒரு நல்ல பயிரை அடைய உதவும் என்று வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். விவசாயிகள் இப்போது சிறந்த விவசாய முறைகளை பின்பற்றுகின்றனர். பெரிய விவசாயிகள் ஏற்கனவே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கேரள தோட்டக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் பி.கே தெரிவித்தார். உள்நாட்டு சந்தையில் விலைகள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வரும் போக்கைக் காட்டுகின்றன.

Translated by Gayathri G

Published on February 27, 2020 05:07