தமிழ்

Adjusted Gross Revenue (AGR): ஏன்‌ சீர்செய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted gross revenue) (ஏ.ஜி.ஆர்)‌ டெலிகாம் கம்பெனிகளை பாதிக்கும்

Satya Sontanam | Updated on January 20, 2020 Published on January 20, 2020

File photo   -  Getty Images/iStockphoto

ரூ‌ 1.47 லட்சம் கோடி வரை பாதிப்பு

தொலைத்தொடர்பு  சேவை செய்யும் ஆபரேட்டர்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவுக்கு கடந்த வாரமும் இக்கட்டான நிதி நெருக்கடியிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு இறுதியில் (அக்டோபர் மாதத்தில்)
தொலைத்தொடர்பு  நிறுவனங்களான  பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அரசாங்கத்திற்கு வருவாய் பகிர்வு தொகையாக ₹1.47 லட்சம் கோடிகள் செலுத்த வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தது. டெலிகாம் கம்பெனிகள் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு  உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விண்ணப்பம் செய்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் சீராய்வு மனுவை  விசாரித்தப் பின் மீண்டும் தள்ளுபடி செய்தது. இதனால் டெலிகாம் கம்பெனிகள் மேற்கூறப்பட்ட தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தும் கட்டாயத்தில் உள்ளன.

"மறுஆய்வு மனு மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்த பின்னர்,  மறுஆய்வு மனுக்களை மறு பரிசீலனை செய்ய எந்தவொரு நியாயமான காரணத்தையும் நாங்கள் காணவில்லை எனக்கூறி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ் அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவில் தெரிவித்துள்ளது.

சீர்செய்யப்பட்ட மொத்த வருவாயின் (ஏஜிஆர்) வரையறை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த, செப்டம்பர் 2019ல் முடிவடைந்த காலாண்டில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வரலாறு காணாத இழப்பை அறிவித்தன.

இந்தத் தீர்ப்பில் தனியார் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் ஏ.ஜி.ஆரின் மதிப்பைப் பொறுத்து உரிமக்கட்டணம் (License fee) மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் (Spectrum usage charges) ஆகியவற்றிற்கு அதிக தொகையை செலுத்த வேண்டும்.  வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்ட  கட்டணங்களுக்கான தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் பொறுப்புகள் ₹1.3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


அது என்ன ஏஜிஆர்?

தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, 1994 இன் கீழ் தொலைத் தொடர்புத் துறை தாராளமயமாக்கப்பட்டது, அதன் பிறகு ஒரு நிலையான உரிமக் (Fixed licence fees) கட்டணத்தில் நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.  அதிக நிலையான உரிமக் கட்டணத்திலிருந்து நிவாரணம் வழங்க, 1999 ஆம் ஆண்டில் அரசாங்கம் உரிமதாரர்களுக்கு வருவாய் பகிர்வு கட்டண (revenue sharing model) மாதிரிக்கு இடம்பெயர விருப்பமிருப்பின் மாற வாய்ப்பு  அளித்தது.

இதன்படி, மொபைல் தொலைபேசி ஆபரேட்டர்கள் தங்கள் ஏ.ஜி.ஆரின் சதவீதத்தை ஆண்டு உரிம கட்டணம் annual license fee (LF) மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணங்கள் (எஸ்.யூ.சி) spectrum usage charges (SUC) என அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  தொலைத்தொடர்புத் துறைக்கும் (DoT), தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையிலான உரிம ஒப்பந்தங்கள் இந்நிறுவணங்களின் மொத்த வருவாயை வரையறுக்கின்றன.  இந்த உரிம ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலக்குகளை அனுமதித்த பின்னர் ஏஜிஆர் (AGR) கணக்கிடப்படுகிறது.  ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல்.எப்  ( licence fees)  மற்றும் எஸ்.யூ.சி (spectrum usage charges) முறையே 8 சதவீதத்திற்கும் ஏ.ஜி.ஆரின் 3-5 சதவீதத்திற்கும் இடையில் அமைக்கப்பட்டன.

தொலைத்தொடர்புத் துறைக்கும் (DoT) மொபைல் ஆபரேட்டர்களுக்கும் இடையிலான சர்ச்சை முக்கியமாக AGR இன் வரையறையில் இருந்தது. தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பில்லாத சேவைகளிலிருந்து அனைத்து வருவாய்களையும் (தள்ளுபடிக்கு முன்) ஏஜிஆர் உள்ளடக்கியுள்ளது என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) வாதிட்டது. ஏஜிஆர் முக்கிய சேவைகளிலிருந்து பெறப்பட்ட வருவாயை மட்டுமே கொண்டிருக்க வேண்டும், ஆனால் ஈவுத்தொகை, வட்டி வருமானம் அல்லது எந்தவொரு முதலீடு அல்லது நிலையான சொத்துக்களின் விற்பனையின் லாபமல்ல என்று நிறுவனங்கள் கூறின.

2005 ஆம் ஆண்டில், செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI)  ஏஜிஆர் (AGR) கணக்கீட்டிற்கான அரசாங்கத்தின் வரையறையை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

2015 ஆம் ஆண்டில், டெலிகாம் தீர்ப்பாயம் TDSAT தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக வழக்கை  நிறுத்தி வைத்தது. மேலும் ஏஜிஆர் என்பது மூலதன ரசீதுகள் மற்றும் மையமற்ற சொத்துக்கள் மூலம் வரும் வாடகை, நிலையான சொத்துக்கள் விற்பனையின் மூலம் ஈட்டும் லாபம், ஈவுத்தொகை, வட்டி மற்றும் இதர வருமானம் தவிர அனைத்து ரசீதுகளையும் கொண்டுள்ளது என தீர்ப்பளித்த்து.

TDSATன் உத்தரவை உச்சநீதிமன்றம் அக்டோபர் 24, 2019, அன்று ரத்து செய்தது.  DoTஆல் நிர்ணயிக்கப்பட்ட ஏ.ஜி.ஆரின் வரையறையே சரி என தீர்ப்பளித்தது.

இது ஏன் முக்கியமானது?

ஏ.ஜி.ஆரின் வரையறை சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது, ஏனெனில் இது தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் நிதி தாக்கங்களைக் கொடுக்கவல்லது. தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் வருவாய் இந்தியாவின் தொகுப்பு நிதிக்கு செல்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு, ரூபாய் 92,000 கோடி கட்டணம், வட்டி மற்றும் உரிமக் கட்டணத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் வருவாயை அரசாங்கம் இழந்துவிட்ட நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான நிதி தாக்கங்கள் தீவிரமானதாக உள்ளது. குறிப்பாக தொலைதொடர்பு நிறுவனங்களின் இலாபம், கடுமையான போட்டி மற்றும் வீழ்ச்சியடைந்த ARPU (ஒரு பயனரிடம் இருந்து வரும் சராசரி வருவாய்) ஆகியவற்றால் நலிந்துள்ளது.

நாம் ஏன் இதற்கு கவலைப்பட வேண்டும்?

இந்த தீர்ப்பு இத்துறைக்கு பெரும் அடியாகும். பெரும்பாலான தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் கணக்குகளில் இந்த நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்பதால், அவர்கள் ஒரு முறை இழப்புகளைப் (one-off losses) அறிவிக்க வாய்ப்புள்ளது. குறைந்த இபிஎஸ் (EPS) (ஒரு பங்குக்கான வருவாய்) தவிர, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிகர மதிப்பையும் அழிக்கக்கூடிய அதிக கடன் அல்லது நிதி உறுதியற்ற தன்மைக்கு இவை தள்ளப்படும். நீங்கள் எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனத்திலும் முதலீட்டாளராக இருந்தால் இதன் தாக்கத்தை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும்.

ஒரு சில நிறுவனங்கள் நிலுவைத் தொகையிலிருந்து நிவாரணம் பெறாவிட்டால் தங்களுக்கு ஆபத்து என கூறியுள்ளன.

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு பெரிய கவலையே, ஏனெனில் ஒரு சில பெரிய நிறுவனங்களின் தோல்வி சில நிறுவனங்களை ஏகபோகமாக (monopoly)  விலை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்க வழிவகுக்கும்.

நீங்கள் வரி செலுத்துபவர் என்றால், இது நிதிப் பற்றாக்குறையில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க உதவும் மற்றும் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் என நீங்கள் சந்தோஷப்படலாம்.

கடைசியாக‌... மௌனம் பேசுமே

மலிவான டேட்டா (data) மற்றும் இலவச குரல் அழைப்புகளிலிருந்து விடைப்பெறுவதற்கான நேரமிதுவாக இருக்கலாம்

 

Translated by Srikrishnan PC

Follow us on Telegram, Facebook, Twitter, Instagram, YouTube and Linkedin. You can also download our Android App or IOS App.

Published on January 20, 2020
This article is closed for comments.
Please Email the Editor