செய்திகள்

அது என்ன கொரோனோ வைரஸ் நோய்க்கிருமி? விளக்கமான விரிவான பதிவு

KS Badri Narayanan சென்னை ஜனவரி 28 | Updated on January 28, 2020 Published on January 28, 2020

நாவல் கொரோனோ வைரஸ் எப்படி பரவுகிறது, கண்டறிய என்ன வழி, எப்படி வரும் முன் காப்பது, இந்த நோய்க்கிருமி உலகபொருளாதாரத்தை எப்படி சீரழிக்கும்

கடந்த சில வாரங்களாக கொரோனோவைரஸ் என்னும் ஒரு கொடிய நோய்க்கிருமி உலகை ஆட்டிப்படைத்து வருகிறது.
உலக மக்களை அச்சுறுத்தம்
இந்த நோய்க்கிருமி சீன மக்களைத்தான் முதலில் தாக்கியது.
ஐயாயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனோவைரஸால் தாக்கப்பட்டுள்ளனரென்றும், மேலும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் இக்கிருமித் தாக்கி இறந்துவிட்டார்கள் எனவும் சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா இதுவரை சுகமே

இந்தக் கொடிய நோய் இந்தியாவில் உள்ள மக்களை பெரியதாகப் பாதிக்கவில்லை. கேரளா, டெல்லி, மற்றும் பீகாரில் ஆங்காங்கே ஒரு சில நபர்கள் கொரோனோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

நாவல் கொரோனோவைரஸ் என்றால் என்ன

நாவல் கொரோனோவைரஸ் முதல்முதலில் டிசம்பர் 2019 மாதம் தான் மக்களிடம் பரவ ஆரம்பித்தது. சீனாத்தான் இதன் ஆரம்பப்புள்ளி. மற்ற நாடுகளுக்கும் அதிவேகமாக பரவ ஆரம்பித்துள்ள இந்த கொரோனோவைரஸைக் கண்டு சுகாதார நிபுணர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பல மக்களை இது உடல் வலிமையிழக்கச் செய்து மற்றும் கபவாதத்தை (pneumonia)  அதிகரித்து கடைசியில் மக்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதாக வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

கொரோனோவைரஸ் எப்படி பரவுகிறது

சுகாதார வல்லுனர்கள் இது எந்தெந்த வழியில் பரவுகிறதென்று இன்னும் ஆராய்ச்சியில் உள்ளனர்.

இதுவரை அறிந்த வரையில்
1) கொரோனோவைரஸ் இருமல் மற்றும் தும்மல் மூலமாக பருவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2)  உடல் ரீதியாக நேராக தொடர்பு ஏற்படும்போது பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது -  அதாவது நோய்வாய்ப்பட்டுள்ளவருடன் கைக்குலுக்கும் போது அல்லது கட்டியணைக்கும் போதும் இந்த கொரோனோவைரஸ் அடுத்தவருக்கு பரவும்.
3)  கொரோனோவைரஸ் இருக்கும் பொருட்களைத் தொட்டுவிட்டு தங்கள் முகம், வாய்,  மூக்கு அல்லது காதுகளைத் தொடும் போது இது பரவ வாய்ப்புள்ளது (டேபிள், சேர், கம்ப்யூட்டர் வகையான பொருட்கள்).
4) மனித மற்றும் விலங்குகள் உடலில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை தொட்டாலும் இது பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கண்டறிய என்ன வழி

கொரோனோவைரஸ் தாக்கப்பட்டுள்ள மனிதர்கள் குறைந்தது 2 முதல் 14 நாட்கள் வரை காய்ச்சல், இடைவிடாது தும்மல் மற்றும் இருமல், மூச்சுவிட சிரமப்படுதல்
போன்றவற்றால் அவதிக்குள்ளாகின்றனர் என சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவிக்கின்றனர்.

வரும் முன் காப்போம்

நோயைத்தடுக்க சில வழிகளை நிபுணர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறார்கள்.

1) முதலில் சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைக்கழுவும் பழக்கத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க சொல்கிறார்கள்
2) கை கழுவாத நிலையில் தங்கள் முகம், மூக்கு, வாய் மற்றும் காதுகளை தொட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

3) நோய்வாய்பட்டுள்ள மனிதர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க அறிவுறுத்துகிறார்கள்

4) நோய்வாய் பட்டிருக்கும் போது கண்டிப்பாக வெளியில் செல்லக்கூடாது என்றும் கூறுகிறார்கள்

5) மூக்கை மூடும் விதமாக முகமூடியை அணிந்து செல்லவும் என அறிவுறுத்தப்படுகிறது

பொருளாதார சீர்கேடு

மக்களைத் தாக்கியுள்ள இந்த கொரோனோவைரஸ் கொடிய நோயால் பல நாடுகளுக்கு, முக்கியமாக சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு, பொருளாதார நெருக்கடியை கொடுத்துள்ளது. சீனாவில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை வாங்க அண்டை நாடுகள் இப்போது தயக்கம் காட்டுகின்றனர். மேலும், சீனாவும் அண்டை நாடுகளிலிருந்து சிலப்பொருட்களை வாங்க தடை விதித்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் வனவிலங்குகள் இறக்குமதியை முற்றிலுமாக தவிர்த்துள்ளது.
சீனாவுக்கு சென்று வர தடை உத்தரவையும் சில நாடுகள் தங்களது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
அதனால் சீனாவின் பொருளாதாரம் மிகவும் சீர்க்குலைய வாய்ப்புள்ளது.  அப்படி நடந்தால், அது சீனாவை மற்றுமின்றி உலக பொருளாதாரத்தையே  தாக்கும் என்பதில் ஐயமில்லை.
அதற்கான சமிக்கைகள் பங்குச்சந்தையில் ஏற்கனவே தெரிய ஆரம்பித்து விட்டன

Follow us on Telegram, Facebook, Twitter, Instagram, YouTube and Linkedin. You can also download our Android App or IOS App.

Published on January 28, 2020
This article is closed for comments.
Please Email the Editor