பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்- PMVVY), ஓய்வூதியத் திட்டம் 2017 மே மாதம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தினால் (எல்.ஐ.சி) இயக்கப்படுகிறது, இது மார்ச் 31, 2020 அன்று நிறைவடைகிறது.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு மூத்த குடிமகனுக்கு ₹5.75 லட்சம் முதலீட்டு வரம்புடன் துவங்கப்பட்டது. பின்னர், நிதி அமைச்சகம், 2018 பட்ஜெட்டில், இந்த திட்டத்தின் முதலீட்டு வரம்பை  ₹15 லட்சமாக உயர்த்தி, கால அளவை 2020 மார்ச் 31 வரை நீட்டித்தது.

எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 2020 பட்ஜெட்டில், PMVVYல் முதலீடு செய்வதற்கான கால வரம்பை மேலும் நீட்டிக்கவில்லை.  எனவே, இதில் முதலீடு செய்ய இப்போது ஒரு மாத கால அவகாசமே உள்ளது.

நீங்கள் ஒரு நிலையான வருமானத்தைத் எதிர்பார்க்கும் மூத்த குடிமகனாக இருந்தால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதை  பரிசீலிக்கலாம்.

தபால் துறையின் மூத்த குடிமக்களுக்கான (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், SCSS) திட்டத்தை விட இது பெரிதாக இல்லை என்றாலும், வரி சலுகைகள் மற்றும் வருவாயைப் பொறுத்தவரை, நீங்கள் ஏற்கனவே SCSSல் உங்கள் முதலீட்டு வரம்பை கடந்துவிட்டால் இந்த திட்டத்தை நினைவில் கொள்ளலாம்.

அடிப்படை விவரங்கள்

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே PMVVY இல் இணைய முடியும்.  உச்ச வயது வரம்பு இல்லை. இத்திட்டத்தில் 10 ஆண்டுகள் பாலிசி கால அவகாசம் உள்ளது, இக்காலத்தில் ஓய்வூதிய தொகை செலுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் கொள்முதல் விலை (purchase price) எனப்படும் மொத்த தொகை முதலீடு தேவைப்படுகிறது, அதன் பிறகு முறையான இடைவெளியில் ஓய்வூதியம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

முழு கொள்முதல் விலையும் 10 ஆண்டு பாலிசி காலத்தை நிறைவு செய்த பின்னரோ அல்லது ஓய்வூதியதாரர் மரணித்தாலோ  செலுத்தப்படும்.

ஓய்வூதியதாரரே ஓய்வூதியத்தின் அளவு அல்லது கொள்முதல் விலையை தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய தொகைக்கான கால அளவையும் சார்ந்துள்ளது - மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டு என தேர்வு செய்து கொள்ளலாம்.

குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதத்திற்கு ₹1,000, காலாண்டிற்கு ₹3,000, அரை வருடத்திற்கு, ₹6,000 மற்றும் வருடத்திற்கு, ₹12,000 ஆகும், அதே நேரத்தில் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை முறையே ₹10,000, ₹30,000, ₹60,000 மற்றும்  முறையே ₹1.2 லட்சம் ஆகும்.

ஓய்வூதிய கட்டணம் NEFT அல்லது ஆதார் மூலம் இயக்கப்படும் கட்டண அமைப்பு (AePS) மூலம் கிடைக்கப்பெறும். முதலீடுகள் விரும்பிய ஓய்வூதியத்தின் அளவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கு தேவையான முதலீட்டுத் தொகைகள் ₹1.5 லட்சம் (மாதாந்திர), ₹1,49,068 (காலாண்டு), ₹1,47,601 (அரை ஆண்டு) மற்றும் ₹1,44,578  (வருடாந்திர பென்ஷனுக்கு).

சந்தாதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையை பொறுத்து, முதலீட்டின் வருவாய் விகிதம் 8 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதம் வரை இருக்கும். பணம் செலுத்துவதற்கான காலம் அதிகமானால், முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும்.

SCSS காலாண்டு வட்டி செலுத்துதலுடன் ஆண்டுக்கு 8.6 சதவீத வருமானத்தை அளிக்கிறது என்பதை நினைவில் கொள்க.

தற்போதைய வரி விதிகளின்படி ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி இன் கீழ் SCSS  முதலீடுகளுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது. இந்த வரிவிலக்கு PMVVY இல் செய்யும் முதலீடுகளுக்கு இல்லை.

PMVVY மற்றும் SCSS மூல்ம் ஈட்டும் வட்டிக்கு தனிநபரின் பொருந்தக்கூடிய  விகிதங்களின்படி வரி விதிக்கப்படும்.

இருப்பினும், மூத்த குடிமக்கள் SCSSல் ஈட்டும் வட்டி மீது பிரிவு 80TTB இன் கீழ் ஆண்டுக்கு ₹50,000 வரை விலக்கு பெறலாம்.

தெளிவாக,SCSS திட்டம் ஐந்து வருடங்கள் (இன்னும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கக்கூடியது), PMVVYயை விட சிறப்பாக உள்ளது, ஆனால் இதில் முதலீட்டு உச்சவரம்பு ₹15 லட்சம் மட்டுமே. ஒரு மூத்த குடி தம்பதியினர் சேர்ந்து ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

எல்.ஐ.சி அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனில் எல்.ஐ.சி இணையதளம் மூலமோ ஒருவர் PMVVYல் இணையலாம்.

முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறுதல்

PMVVYல் செய்யும் முதலீடு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பூட்டப்பட்டிருக்கும்.  இருப்பினும், சில சூழ்நிலைகளில் முன்கூட்டியே வெளியேற இந்த திட்டம் அனுமதிக்கிறது. இவ்வாறு வெளியேறும் போது முதலீட்டு தொகையில் 98 சதவீத தொகை மட்டுமே கிடைக்கும்.

முதலீடு செய்ததில் இருந்து மூன்று வருடம் முடிந்தபின் முதலீட்டுத் தொகைக்கு எதிராக கடனும் பெற முடியும். கிடைக்கக்கூடிய அதிகபட்ச கடன் கொள்முதல் விலையில் 75 சதவீதம் ஆகும்.

கடன் தொகைக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் குறிப்பிட்ட இடைவெளியில் தீர்மானிக்கப்படும். பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய ஓய்வூதியத் தொகையிலிருந்து கடனுக்கான வட்டி மீட்டெடுக்கப்படுகிறது.  இருப்பினும், திட்டத்தின் முதிர்ச்சியின் போது கடன்  நிலுவையில் இருந்தால், வெளியேறும் நேரத்தில் கிடைக்கும் வருமானத்திலிருந்து நிலுவைத் தொகை மீட்கப்படும்.

நீங்கள் PMVVYல் முதலீடு செய்தவுடன், 15 நாட்கள் (பாலிசி ஆன்லைனில் வாங்கப்பட்டால் 30 நாட்கள்) கால அவகாசம் அனுமதிக்கப்படுகிறது, இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் சரியான காரணங்களைக் கூறி இந்த திட்டத்திலிருந்து விலகலாம்.

இவ்வாறு நீங்கள் திரும்பப் பெற விரும்பினால், முத்திரை வரி மற்றும் ஓய்வூதியம் (ஏதேனும் இருந்தால்) மீதான கட்டணங்களைக் கழித்த பின்னர் நீங்கள் டெபாசிட் செய்த கொள்முதல் விலை திரும்பப் அளிக்கப்படும்.

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW