இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் கோட்டயம்  ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

 

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கே.எஸ்.டி.எம்.ஏ) கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

 

குடிநீரை பாட்டில்களில் கொண்டு செல்வதையும் மக்கள் ஒரு நடைமுறையாக கொள்ள வேண்டும். தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவது வெப்பத்தை எதிர்த்துப் போராட உதவும். கடந்த செவ்வாய்க்கிழமை, தொழிலாளர் துறை, வேலை நேரத்தை மறுபரிசீலனை செய்து, மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற வேலைகளை தடை செய்தது.

 

கடந்த சில ஆண்டுகளாக கேரளா, பருவமழையின் நுழைவாயிலாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்பாக வெப்பமடைந்து, வெப்ப அலைகளை அமைக்கும் போக்கினையும் கொண்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே மாநிலத்தின் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்-ஐ தாண்டியது.

 

மேலே பட்டியலிடப்பட்டுள்ள மாவட்டங்களில், மத்திய கேரளாவில் உள்ள தோட்டங்களின் இல்லமான கோட்டயம், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டி தொடர்ந்து பதிவு செய்து வருகிறது, கடந்த இரண்டு நாட்களில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.

 

புது தில்லி ஐஎம்டியின் தேசிய அலுவலகம், கோட்டயத்தில் நாளை (சனிக்கிழமை) 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது,  பின்னர் 36 டிகிரி செல்சியசாக குறைந்து பிப்ரவரி 20 வரை  இதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது

 

வெப்பநிலை1.6-3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

உயர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினால் பிப்ரவரி 19 முதல் 21 வரை கிழக்கு மற்றும் தென் தீபகற்ப இந்தியாவில் (தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகள்) ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று ஐஎம்டியின் கண்ணோட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவின் கோட்டயத்தில் வெப்பநிலை அதிகரிப்பதற்கு தெற்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து வீசும் தரைகாற்று மற்றும் வறண்ட வானிலை ஆகியவையே காரணம் என தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் ஸ்கைமெட் வானிலையின் துணைத் தலைவர் மகேஷ் பலவத் தெரிவித்தார். மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டதாகவும், அதே நேரத்தில் வட இந்தியாவின் சமவெளிகளில் வானிலை குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு நகர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

சென்னையின் வானிலை பதிவர்கள் தென்னிந்தியாவின் கோடைகாலத்தைப் பற்றிய விவாதங்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன் தங்கள் பதிவுகளை இடத்தொடங்கினர்.

 

 

 

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW