மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் ஜனவரி முதல் மூன்று வாரங்களில் (ஜனவரி 1 முதல் 21 வரை) குறைவான மழை பெய்துள்ளது, அதே நேரத்தில் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

 

இந்த பிராந்தியங்களில் உள்ள வானிலை துணைப்பிரிவுகளில், கிழக்கு ராஜஸ்தான், குஜராத், சவுராஷ்டிரா, கட்ச், கொங்கன், கோவா, கடலோர கர்நாடகா மற்றும் தென் தீபகற்பத்தின் பெரும்பகுதிகளில் மிகக் குறைந்த மழையே பதிவானது.

 

குஜராத், கொங்கன் மற்றும் கோவாவின் கிழக்குப் பகுதிகள் -100 சதவீதத்துடன் மழை பற்றாக்குறை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், வடக்கு உள் கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, லட்சத்தீவு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை சற்று லேசான மழை பெற்றன.

 

தெற்கு தீபகற்பத்தில் வெப்பமான குளிர்காலம்

 

வரவிருக்கும் கோடைகாலத்தில் இந்திய தீபகற்பத்தில் குறிப்பாக தெற்குப் பகுதிகள் அசாதாரணமாக வெப்பமடையக்கூடும் என்பதை உலகளாவிய வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுகின்றன. கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் 'வெப்பமான குளிர்காலத்தை' சந்தித்ததே இந்த விளைவுக்கான அறிகுறிகள்.

 

இதற்கிடையில், ஒரு தீவிரமான மேற்கத்திய இடையூறு இன்று (திங்கட்கிழமை) வடமேற்கு இந்தியாவுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஏற்கனவே வட பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

 

இதனால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் புதன்கிழமை ஒரு சில இடங்களில் பலத்த மழை அல்லது பனிப்பொழிவுமற்றும் வடமேற்கு இந்தியாவின் மலைகள் மீது பரவலாக மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும்.

 

இப்பிராந்தியத்திற்கான விரிவான முன்னறிவிப்பு பின்வருமாறு

 

இன்று (திங்கள்): பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் உத்தரபிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடி மழைப்பொழிவு இருக்கும்.

 

வடமேற்கு மற்றும் மேற்கு-மத்திய அரபிக்கடலில் வலுவான காற்று (மணிக்கு 45 முதல் 55 கிமீ) வேகத்தை எட்டும். இது தெற்க்கில் மேற்கு இடையூறு எட்டுவதைக் குறிக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

நாளை (செவ்வாய்க்கிழமை): ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழை அல்லது பனிப்பொழிவு இருக்கக்கூடும்.

 

பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரில் ஆலங்கட்டி மற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்; ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களிலும்; மத்தியப் பிரதேசம், மேற்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் மின்னலுடன் ஓரிரு இடங்களில் மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.

 

நாளை மறுநாள் (புதன்கிழமை): உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி மீது அடர்த்தியான மூடுபனி நிலவும்; ராஜஸ்தானில் ஒரு  சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி நிலவும்

 

இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ஜார்கண்ட், பீகார், வங்காள சமவெளி, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

மேற்கத்திய இடையூறுகளின் வெப்பமயமாதல் தாக்கம்

 

வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அடுத்த இரண்டு நாட்களில் நாட்டின் பிற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை, அதன்பிறகு மேற்கத்திய இடையூறு நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் என்பதால் நாட்டின் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வீழ்ச்சியடையும்.

 

நாளை மற்றும் புதன் கிழமை, வங்காளம், சிக்கிம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் காலை நேரங்களில் மிதமான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

இன்று (திங்கட்கிழமை) காலை, பஞ்சாப் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது, அதே நேரம் மேற்கு உத்தரபிரதேசத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மூடுபனி காணப்பட்டது.

 

அம்பாலா மற்றும் பஹ்ரைச் ஆகிய இடங்களில் காணும் நிலை (Visibility) 25 மீட்டர் அல்லது அதற்குக் கீழும், பரேலியில் 200 மீட்டருக்குக் கீழே காணும்நிலை இருந்தது.

 

நேற்று, அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ் புனலூரில் (கேரளா) பதிவாகியுள்ளது மற்றும் பஹ்ரைச்சில் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) மிகக் குறைவாக 4.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

 

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் புது தில்லியில் வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாகவும், மேகமூட்டமாகவும் இருந்தது. மும்பை 27 டிகிரி செல்சியஸில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; கொல்கத்தா 19 டிகிரி செல்சியஸில் சற்று குளிராக இருந்தது. சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்பட்டது. வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக பதிவானது.

 

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW