வடக்கு பாகிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மீது நிலவும் மேற்கத்திய இடையூறு புதன்கிழமை முதல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. அதன் கிளை சுழற்சி வடகிழக்கு ராஜஸ்தானிலிருந்து ஒரே இரவில் வடக்கு ஹரியானாவுக்கு (வியாழக்கிழமை காலை) முன்னேறியது. இந்த இணையின் தாக்கம் வடமேற்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்தியாவின் பிராந்திய பகுதிகளில் மேலோங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

அடர்ந்த மூடுபனி மற்றும் பரவலான மழை

ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் உள்ள மலைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை பரவலாக மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும். இந்த காலகட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தின் வடக்கு பகுதிகள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள சமவெளிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அடர்த்தியான மூடுபனி வடமேற்கு இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சமவெளிகளில் ஒரு சில இடங்களில் பொழியக்கூடும். இதற்கிடையில், ஒரு குளிர் அலை நிலை (cold wave) இன்று மற்றும் நாளை (வியாழன் மற்றும் வெள்ளி) மேற்கு இந்தியா (கட்ச்) மீதும் மற்றும் ஹரியானா, சண்டிகர் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய இடங்களில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் (வியாழன் மற்றும் வெள்ளி) நிலவும்.

குளிர்ந்த நாள் வெப்பநிலை (16 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக) நாளை (வெள்ளிக்கிழமை) வரை உத்தரகண்ட் மற்றும் மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தியாவில் மின்னல், இடியுடன் கூடிய மழை

மேற்கத்திய இடையூறு மற்றும் அதன் கிளை சுழற்சியினால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் மூலம் ஹரியானாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வங்காளதேசம், தெற்கு உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் கங்கை சமவெளியின் மத்திய பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும்.

 

அடுத்த ஐந்து நாட்களுக்கு (பிப்ரவரி 3 வரை) வட இந்தியா, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சமவெளிகளில் இரவு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். முதல் இரண்டு நாட்களில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஜார்க்கண்ட், வங்காளம் மற்றும் சிக்கிம் சமவெளிகளில் காலை நேரங்களில் மிதமான மூடுபனி இருக்கும்.

அடுத்த மூன்று நாட்கள் எப்படி?

இன்று (வியாழக்கிழமை): வடக்கு ராஜஸ்தானின் சில பகுதிகள், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம், பீகார், அசாம், மேகாலயா மற்றும் ஒடிசா மீது அடர்ந்த மூடுபனி நிலவும். உத்தரகண்ட் மீது ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பொழியும்; மற்றும் உத்தரபிரதேசம், ஒடிசாவில் ஆங்காங்கே மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

 

வெள்ளிக்கிழமை: வடக்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், அசாம், மேகாலயா மற்றும் ஒடிசா மீது அடர்ந்த மூடுபனி நிலவும்.

அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, வங்காளம் மற்றும் சிக்கிம் மலைகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கட்ச், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் குளிர் அலை நிலை இருக்கும்.

சனிக்கிழமை: பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மீது அடர்ந்த மூடுபனி நிலவும். அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி மீது குளிர் அலை நிலவும்.

தி வெதர் கம்பெனியின் முன்னோட்டம்

ஐபிஎம் பிசினஸின், தி வெதர் கம்பெனியின் பார்வை: வறண்ட வடமேற்கு காற்று மற்றும் ஈரப்பதமான தென்மேற்கு காற்று ஆகியவை ஒன்றிணைந்து கிழக்கு இந்தியா முழுவதும் கடலோர ஒடிசா, வங்காள சமவெளி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை கொடுக்கும் என்று கணித்துள்ளது. இந்த செயல்பாடு இன்று மாலைக்குள் முடிவடையும், ஆனால் மற்றொரு சுற்று மழை சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை சனிக்கிழமை காலை முதல் தாக்கும்.

ஐஎம்டி கண்ணோட்டத்துடன் உடன்படும் வகையில், நாளை முதல் வடமேற்கு இந்தியாவின் மலைகளை பாதிக்கும் பலவீனமான மேற்கத்திய இடையூறுக்கான சாத்தியக்கூறு இருப்பதாக தி வெதர் கம்பெனி கூறியுள்ளது. இது சனிக்கிழமை வரை இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மீது ஓரிரு இடங்களில் பனிப்பொழிவை கொடுக்கும். இந்த வாரத்தின் எஞ்சிய காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நாட்டின் வடக்குப் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.

மேற்கத்திய இடையூறு நடவடிக்கைகளில் மாற்றம்?

பிப்ரவரி 3 முதல் 5 வரை நீட்டிக்கப்பட்ட ஐஎம்டி கண்ணோட்டம் வடமேற்கு இந்தியா, கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் மலைகள் மீது ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

ஐரோப்பிய வானிலை மையம் (ECMWF) பிப்ரவரி முதல் வாரத்தில் மேற்கத்திய இடையூறின் நடவடிக்கைகள் தொடரும் எனவும், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஒரு உயர்ந்த காற்றழுத்த பகுதி உருவாகி காற்றின் திசையில் மாற்றம் ஏற்படும் எனவும் கூறுகிறது, இது குளிர்ந்த ஆர்க்டிக் காற்றை வடமேற்கு இந்தியாவில் வீசச்செய்து, இரவு நேர வெப்பநிலையைக் குறைத்து, பகல் நேர வெப்பநிலையைத் அதிகப்படுத்தும்.

நேற்று (புதன்கிழமை), கார்வார் (கர்நாடகா) அதிகபட்ச பகல் வெப்பநிலையாக 37.2 டிகிரி செல்சியசும், மிகக் குறைந்த இரவு வெப்பநிலை 4.1 டிகிரி செல்சியஸாக ஹிசார் (ஹரியானா) பதிவானது.

 

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW