செய்திகள்

இந்த பட்ஜெட் ஏன் எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது

KS Badri Narayanan சென்னை | Updated on January 27, 2020

File photo of Finance Minister Nirmala Sitharaman

அனைத்து தரப்பினரையும் சந்தோஷப்படுத்துவாரா நிர்மலா சீதாராமன்


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த சனிக்கிழமை பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக  பட்ஜெட் நாள் மக்களிடமிருந்து பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.  பட்ஜெட்டுக்கு புறம்பாக சில முக்கிய அறிவிப்புகளை கடந்த சில ஆண்டுகளாக நிதியமைச்சர்கள் எடுத்ததால்,  மற்றும் ஜி எஸ் டி என்கிற மறைமுக பொருள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தியுள்ள தாலும், பட்ஜெட் நாள் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணத்தாலும் வேலையின்மை திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாலும், இம்முறை ஒட்டுமொத்த இந்தியாவும் வரும் பட்ஜெட் நாளை மிகவும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.


இந்த மந்த நிலைக்கு காரணம் மக்களிடத்தில் வாங்கும் திறமின்மையே என்று பொருளாதார நிபுணர்கள் முதல் சாமனிய மனிதர் வரை அறிந்துள்ளனர். ஆகவே மக்களிடத்தில் பணப்புழக்கம் அதிகம் செய்தால், வாங்கும் திறன் அதிகரிக்கும். அது பொருளாதார மந்த நிலையையும் சீர்செய்யும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

வருமான வரி சலுகைகள்?


இதனால் சம்பளம் வாங்கும் சாமானிய தொழிலாளர்கள் தங்களுக்கு தனிமனித வருமான வரியில் மிகப்பெரிய சலுகை கிடைக்கும் என அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.  தற்போது ரூபாய் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வாங்குபவர்கள் 5% வரி செலுத்துகிறார்கள். வரும் பட்ஜெட்டில் 5%-வரி  ரூபாய் 7 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக பெருவாரியாக மக்கள் நினைக்கிறார்கள். ரூபாய் 7 லட்சம் முதல் 10 லட்சம் வாங்குவார் வரை புதியதாக ஒரு 10% வரி வரம்பு ஏற்படுத்தலாம் எனவும் எதிர்ப் பார்க்கிறார்கள். மேலும் ரூபாய்10 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வாங்குபவர்கள் 20%  வரம்பில் இருக்க வாய்ப்புள்ளதாக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி செய்தால் பெருவாரியான மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும், அதனால் வாங்கும் திறன் மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த பட்ஜெட்டை பங்குத் தரகர்கள் மற்றும் பங்கு துறைசார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்ஸ் துறையும் மிகவும் ஆர்வமாக எதிர்பார்ப்புடனுள்ளது. செக்யூரிட்டிஸ் டிரன்சாக்சன் டாக்ஸ் (securities transaction tax) எனும் பங்கு வர்த்தகம் செய்ய போடப்பட்ட வரி முற்றிலுமாக விலக்கப்படும் அல்லது வெகுவாக குறைக்கப்படும் என பங்குத் தரகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், லாங் டெர்ம் கேபிடல் கெய்ன்ஸ் டேக்ஸ் long term capital gains tax (நீண்டகால மூலதன ஆதாய வரி) விலக்கப்படும் என நம்புகிறார்கள். மிக முக்கியமாக ஈவுத்தொகை விநியோக வரி எனப்படும் டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸ் முற்றிலுமாக விலக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

எப்பொழுதும்போல் விவசாயத்துறை சார்ந்தவர்கள் இம்முறையும் தங்களுக்கு நிறையச் சலுகைகள் கிடைக்கும் என நம்புகிறார்கள். இம்முறை மழை சற்று பரவலாக அதிகமாக பெய்தாலும் இவர்கள்  பொது பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, குறிப்பாக எண்ணை விதை விவசாயிகளுக்கு,  ஊக்கத்தொகை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். மேலும் நேரடி பண விநியோகம் மூலம் சரியாகவும் மற்றும் அதிகம் பேர் பயனடைய பட்ஜெட் வழிவகை செய்யும் என்று நம்பிக்கையும் உள்ளது.

 

அந்தரத்தில் ஆட்டோமொபைல்ஸ்

 

கடந்த ஆண்டுகளாக மிகவும் சரிவை சந்தித்த ஒரு துறை ஆட்டோமொபைல் என்னும் வாகனங்கள் உற்பத்தி செய்யும் துறையாகும். இந்த பட்ஜெட் மக்களிடம் பண புழக்கத்தை அதிகரித்து ஆட்டோமொபைல் விற்பனையை அதிகரிக்க வழிவகை செய்யும் மிகவும் நம்புகிறார்கள். இதைத் தவிர, பழைய வாகனங்களை முற்றிலுமாக அழிக்க,  ஊக்கத்தொகை அல்லது சில சலுகைகள் செய்ய வாய்ப்பு உள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

 

இதைத்தவிர  நெருக்கடியில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களும் சலுகைகள் எதிர்பார்க்கின்றனர். பொது பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு தாங்களும் நிதி உதவி செய்ய பொது பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் கம்பெனிகள் போல் தங்களுக்கும் ஒரு சுழற்சி நிதிச் (refinance) செய்ய ஒரு பொதுவாரியம் அமைக்கும்  கோரிக்கை வைத்துள்ளனர். இப்படி ஒவ்வொரு துறைகளுக்கும் மிகப்பெரிய கோரிக்கைகள் உள்ள நிலையில் அரசாங்கம் தனது நிதி நிலைமையை எவ்வாறு சமாளிக்கும் என மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

 

நிதிப்பற்றாக்குறை

 

ஏற்கனவே அரசாங்க செலவினங்கள் வருவாய்க்கு மேல் உள்ளதால் நிதிப்பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது இந்தச் சூழ்நிலையில் மேலும் பலச் சலுகைகள் அளித்தால், நிதி எங்கிருந்து கிடைக்கும் என்ற கேள்வி ரேட்டிங் ஏஜென்சிஸ் உன்னிப்பாக கவனிக்கின்றனர். நிதி பற்றாக்குறை மேலும் வளர்க்கும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்தால் இந்த நிறுவனங்கள் இந்தியாவின் மதிப்பீட்டை குறைக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் அந்நிய முதலீடுகள் இந்தியாவைவிட்டு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. இது பங்குச்சந்தை மார்க்கெட்டை ஒரு பெரும் சூறாவளியை நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை. ஆகவே அனைவரது கவனமும் இப்பொழுது நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உள்ளது.

Follow us on Telegram, Facebook, Twitter, Instagram, YouTube and Linkedin. You can also download our Android App or IOS App.

Published on January 27, 2020
This article is closed for comments.
Please Email the Editor