ஹரியானாவின் மானேசரில் நாவல் கொரோனா வைரஸ்க்கான தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் கழிப்பறைகள் பற்றாக்குறை மற்றும் கடுமையான நீர் பற்றாக்குறை ஆகியவை அதிகமாக உள்ளன. இதனால் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் சீனாவிலிருந்து வந்த 350 மாணவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுஹானில் படித்து வருகின்றனர், மேலும் 50 பேர் வரை  வுஹானில் இருந்து ஆறு மணிநேர பயணத்தில் உள்ள யின்சாங்க் நகரைச் சேர்ந்தவர்கள்.   அடுத்த இரண்டு வாரங்களுக்கு இவர்கள் இராணுவத்தால் பல படுக்கைகள் கொண்ட பெரிய தூங்கும் இடத்தில் தங்க வைக்கப்படுவர்.

 

சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் பணியாளர்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களே இந்த முகாமின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும். ”

 

அடிப்படை வசதி பற்றாக்குறை

 

யின்சாங்கில் இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர் ஜெலின் பிரபாகர் (22) ஞாயிற்றுக்கிழமை இந்த முகாமிற்கு வந்தார். தானும் ஒரு சில மாணவர்களும் அதிக ஆபத்துள்ள பயணத்தை முடித்துவிட்டதாகவும், யின்சாங்கிலிருந்து வுஹானுக்கு சாலை வழியாக பயணம் செய்து பின்னர் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் பிரபாகர் கூறினார். 

 

bl04-cornoa-toilet

Makeshift toilets

 

 

“நாங்கள் வுஹானைச் சேர்ந்த மாணவர்களுடன் நீண்ட தூரம் பயணித்தோம். நான் 36 மணி நேரமாக குளிக்கவில்லை. கழிவறை பயன்பாட்டிற்கு மற்றும் குளிக்க என மிகக்குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. எங்களில் 350 பேருக்கு 10 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன, பெரும்பாலானவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளன,” என்று பிரபாகர்  பிசினஸ்லைனிடம்  கூறினார்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க தனிப்பட்ட சுத்தத்தின் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஆலோசனைகள் பலமுறை வலியுறுத்தியுள்ளன. தற்போது, வைரஸுக்கு உறுதியான சிகிச்சை இல்லை மற்றும் அறிகுறி மேலாண்மை மட்டுமே ஒரே வழி. கேரளாவிலிருந்து மூவர் பாதிக்கப்பட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. உலகளவில் 14,557 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 305 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

 

சந்தேகத்திற்குரிய மாணவர்கள்

 

திங்களன்று, கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்ட ஆறு மாணவர்கள் ஆம்புலன்ஸில் மானேசர் வசதியிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டனர். இது மற்ற மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது. 

"சந்தேகத்திற்கு உரிய மாணவர்கள் எங்கள் கண் முன்னே கொண்டு செல்லப்பட்டனர். வுஹான் மாணவர்களிடமிருந்து நாங்கள் பிரிக்கப்பட வேண்டும்," என்று பிரபாகர் கூறினார்.

 

bl04-cornoa-toi

Water heating facility where hot water is available only from 6:30 am to 7:30 am

 

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மட்டுமே சுடுநீர் கிடைக்கிறது, மேலும் மாணவர்கள் ஒரு வாளி மட்டுமே பெற வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. “வைரஸைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முதன்மையான தேவை சூடான நீரை அணுகுவதாகும். குளிக்க மூடிய அடைப்புகள் இல்லாததால், சில நேரங்களில் மாணவர்கள் குளிரில் வெளியே குளிக்க வேண்டியிருக்கும். இரவில், வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்குக் குறைகிறது, நாங்கள் இந்த தங்குமிடத்தில் மிகவும் குளிராக உணர்கிறோம், ” என்றார் பிரபாகர்.

 

கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் முகாமில் உள்ள சுகாதார சீர்கேட்டினை வீடியோ, புகைப்படங்கள் பிடித்து கேரளாவைச் சேர்ந்த எம்.பி. எல்மரம் கரீமின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மானேசரில் அவர்கள் இருக்கும் வரை அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய கரீம், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் அவசர தலையீட்டைக் கோரினார்.

 

 “முகாமில் போதுமான சுகாதார வசதி இல்லை. சில கழிப்பறைகள் உள்ளன ஆனால் அவை நல்ல நிலையில் இல்லை. கடுமையான நீர் நெருக்கடி நிலவுகிறது, இதனால் மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தவோ அல்லது குளிக்கவோ முடியவில்லை,” என கரீம் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதினார்.

 

முகாமில் சுமார் 20 தெருநாய்கள் இருப்பதாக பிரபாகர் கூறினார். இது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. “நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எந்த வைரசும் அவற்றை எளிதில் தாக்கும். முகாமில் அவை  இருப்பது இங்கு தங்கியுள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும், ”என்று கரீம் கூறினார்.

 

Translated by Gayathri G

 

comment COMMENT NOW