வணக்கம்! கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு, இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அடுத்த இரு தினங்களில் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இலங்கை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து தொலைவில் அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தாலும் தமிழகம் மீது கீழைக்காற்றை இழுக்கக்கூடிய வலுப்பெற்ற அமைப்பாக இது இருக்கும். இதேபோன்றதொரு சுழற்சி இலங்கை மற்றும் கன்னியாகுமரி ஒட்டிய கடல் பகுதியில் அடுத்தடுத்து உருவாக்கக்கூடும் என்று சர்வதேச மாதிரிகள் தெரிவிக்கின்றன.

மழையின் தாக்கம் தென் தமிழகத்தில் அதிகமாக இருந்தது, இலங்கையின் பருத்தித்துறை, பரந்தன், வெராவில், பல்லவராயங்காடு மற்றும் மன்னார் தீவில் இருந்து மழை மேகங்கள் புறப்பட்டு மன்னார் வளைகுடா வழியே தமிழகத்தினுள் பயணித்து கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சமயபுரம், கும்பகோணம், பட்டுகோட்டை, அதிராமபட்டினம், ஒராங்குடி, கோத்தமங்கலம், பேராவூரணி, ஜமாலியா, காட்டுமாவடி, மனமேல்குடி, தேவகோட்டை, இளையான்குடி, மற்றும் இலந்தக்கரை ஆகிய இடங்களில் கொட்டித்தீர்த்த்து. சேத்பட் மற்றும் வந்தவாசி இடையே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து மேற்கு நோக்கி உள்துறைக்கு நகர்ந்தது. வடக்கே, ஆந்திராவின் திருப்பதி மற்றும் பாகாலாவிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

சென்னை: 40 சதவீதம் மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று காலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், பிற்பகல் நேரங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. சர்வதேச மாதிரிகளை பொருத்தவரை, இன்று பிற்பகல் வரை ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 15 முதல் 30 கிமீ வேகத்தில் காற்று வீசும், மழைக்கான வாய்ப்பு 40 சதவீதம்.

தமிழகத்தின் பிற இடங்களில் மேகமூட்டமான சூழ்நிலை நிலவும். புதுச்சேரியில் அதிக மழை பெய்யும் என சர்வதேச மாதிரிகள் கணிப்பதால் இங்கு மழைக்கான வாய்ப்பு 50 சதவிகிதம். இரவு நேரங்களில் மழைக்கான வாய்ப்பு 100 சதவீதம்.

சேலத்திற்கு மழை வாய்ப்பு 20 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். வானம் மேகமூட்டதுடன் கானப்படும்; கோயம்புத்தூரில் மழைக்கான வாய்ப்பு 40 முதல் 80 சதவீதம்; திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரையில் 40 முதல் 80 சதவீதம் வரை மழைக்கான வாய்ப்பு இருக்கும்; மேலும் தூத்துக்குடிக்கு 80 முதல் 90 சதவிகிதம் வரை மழைக்கான வாய்ப்பு உண்டு.

சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA / VOMM) காலையில் மூடுபனி / லேசான மழை, வெப்பநிலை  28 டிகிரி செல்சியஸ் மற்றும் வடக்கு கீழைக்காற்று மணிக்கு 11 கிமீ வேகத்தில் வீசியது. விமானங்கள் புறப்படுவதில் எட்டு நிமிட தாமதம் இருந்தது. வருகையில் தாமதம் இல்லை.

புதுடெல்லி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு: தெற்கு தீபகற்பத்தில் கீழை அலை நிகழ்வுகளின் காரணமாக பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழைப்பொழிவு நாளை (சனிக்கிழமை) வரை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் டிசம்பர் 4 முதல் 6 வரை தெற்கு தீபகற்பத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும்.

 

வடகிழக்கு பருவமழை நேற்று (வியாழக்கிழமை) பல இடங்களுக்கு கனமழை கொடுத்தது. மழையளவு நிலவரம் (செ.மீ): தாம்பரம்-15; IAF தாம்பரம்-13; ஜெயங்கொண்டம்-10; ஸ்ரீபெரும்புதூர் -9; கே.எம் கோயில்-8; கடலூர் மற்றும் சீர்காழி-7 செ.மீ; மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி, அண்ணாமலை நகர், வேப்பூர், காட்டுமயிலூர், காரைக்கால், சமயபுரம், தொண்டி, திருத்துறைப்பூண்டி, பரங்கிப்பேட்டை, சத்தியபாமா பல்கலைக்கழகம், சேத்தியாதோப்பு, அரியலூர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை விமான நிலையம்-5; நாகப்பட்டினம், பட்டுகோட்டை, ஸ்ரீமுஷ்ணம், மானாமதுரை, பஞ்சப்பட்டி, புதுக்கோட்டை, ஆர்.எஸ். மங்கலம், காரைக்குடி, விழுப்புரம், ஆடுதுரை, திருவாடானை, திருவாரூர், திருவிடைமருதூர், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, பெருங்கலூர், பெரிய காலப்பேட்டை (புதுச்சேரி), திருச்செந்தூர், மற்றும் விருதாச்சலம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவானது.

 

வெள்ளிக்கிழமை இந்திய வானிலை மைய கணிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை சில இடங்களில் கனமான முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

 

மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்

comment COMMENT NOW